Can-Do Samples

< All
Print

INTERPRETIVE READING – Advanced Low – Connection

INTERPRETIVE READING – Advanced low

I can understand some events described in an excerpt from an historical journal.

Read the below content and answer the questions 

அதிபரின் ஆட்டுத்தாடி

அமெரிக்காவின் பதினாறாவது அதிபரை நினைவு கூறும் சமகாலத்தில் வாழ்ந்த பலருக்கு, மனதில் தோன்றுவது நன்கு மழித்தெடுத்த முகம் கொண்ட லிங்கனைத்தான். பல ஆண்டுகள் இந்த உருவத்துடன் வலம் வந்தார் அவர். ஆமாம், அதிபரை அலங்கரித்த அந்த ஆட்டுத்தாடி எப்படி வளர்ந்தது என்ற கேள்வி நமக்கு வருகிறது அல்லவா?

அவர் சார்ந்த குடியரசுக் கட்சியின் பேராளர்கள் (Delegates) பலரும் ஆடை அமைப்பை மாற்றுமாறும் தாடி வளர்த்துக்கொள்ளுமாறும் பலமுறை வற்புறுத்தினர். எங்கே தங்களின் கட்சி வேட்பாளருக்கு அவரின் முரட்டுத்தனமான தோற்றத்தால் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கம் அவர்களுக்கு. ஆனால் இந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் செவி சாய்க்கவே இல்லை.

1860இல் கிரேஸ் பெடல் என்ற  பதினோரு வயது இளம் பெண்ணின் கடிதம் லிங்கனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பலர் சொல்லியும் கேளாத அவர் அந்த இளம்பெண்ணின் கடிதத்தால் தாடியை வளர்க்கத் தொடங்கினாராம். அப்படி என்னதான் இருந்தது அந்த கடிதத்தில்?

மாண்புமிகு A B லிங்கன் அவர்களுக்கு!

என் தந்தை வீடு வந்தபொழுது சந்தையில் இருந்து உங்களின் படத்தையும் திரு ஹாம்லின் அவர்களின் படத்தையும் வாங்கிவந்தார். நான் பதினோரு வயது சிறுமிதான், ஆயினும் நீங்கள் அதிபர் ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். உம் போன்ற தகைமைக்குக் கடிதம் அனுப்ப இந்த சிறுமிக்குத்தான் எத்தனை துணிச்சல் என எண்ணிக்கொள்ள மாட்டீர் என நம்புகிறேன். தங்களால் எனது கடிதத்திற்கு பதிலளிக்க முடியாவிட்டால், என்னைப் போன்று சிறிய பெண் உங்களுக்கு இருந்தால் அவளை பதில் அளிக்கச் செய்யவும். எனது சகோதரர்கள் நால்வரில் இருவர் நிச்சயம் உங்களுக்கே வாக்களிப்பர். தாங்கள் குறுந்தாடி வளர்த்துக் கொண்டால் மற்ற இருவரையும் உங்களுக்கே வாக்களிக்கச் செய்து விடுவேன். உங்களின் ஒல்லியான முக அமைப்பிற்குக் குறுந்தாடி எடுப்பாகவும் இருக்கும். பெண்களுக்குப் பொதுவாகக் குறுந்தாடி பிடிக்கும். இந்தப் பெண்கள் தனது கணவன்மார்களிடம் பேசி உங்களுக்கே வாக்களிக்க வற்புறுத்துவர். நீங்களும் அதிபர் ஆகிவிடலாம். எனது தந்தையின் வாக்கு உங்களுக்குத்தான். எனக்கு வாக்களிக்கத் தகுந்த வயது  இருந்தால் நானும் உங்களுக்குத்தான் வாக்களிப்பேன். காலத்தின் கொடுமை பாருங்கள், எனது தங்கை பிறந்து ஒன்பது வாரங்கள் தான் ஆகிறது. கவலையே வேண்டாம், தாடியை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள், நான் எல்லோரையும் உங்களுக்கே வாக்களிக்குமாறு செய்கிறேன்.  

நன்றி

கிரேஸ் பெடல்
வெஸ்ட் ஃபீல்டு

ஒரு பக்கம் இந்த வயதில் திடீரெனத் தாடி வளர்த்தால் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள் என்று அதில் தனக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லாதது போல கிரேஸிற்குப் பதில் அனுப்பினார் . ஆனால் மறுபக்கம் சிறுகச் சிறுக தாடி வளர்ந்தது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, வாசிங்டனுக்குச்  செல்லும் ரயில் பயணத்தின் இடையில் வெஸ்ட் ஃபீல்டு எனும் இடத்தில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்ற இறங்கினார். அங்கு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கிரேஸ் பெடல் எனச் சத்தமாக அழைத்தார். இதைச் சற்றும் எதிர்பாராத கிரேஸ் புதிதாகத்  தேர்வு செய்யப்பட்ட அதிபரை நோக்கி நடந்தாள் .

அதிபர் தனது குறுந்தாடியைச் சுட்டிக் காட்டி, அந்த இளம் பெண்ணின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, பூரித்தார். கிரேஸுக்கு நன்றியைச் சொல்லி, கன்னத்தில் பண்பாய் ஒரு முத்தம் தந்து விடை பெற்றார் லிங்கன். இந்தக் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு , நமது கருத்து ஒரு பொருட்டே இல்லை எனப் புலம்பும் பொதுமக்கள் அதிகம். ஆனால் உலக வல்லரசான அமெரிக்க வரலாற்றில் ஒரு இளம்பெண் தந்த பரிந்துரை அமெரிக்கர்கள் மதித்துப் போற்றும் ஒரு பெருந்தலைவரின் முகத்தையே மாற்றி இருக்கிறது பாருங்களேன்!

Previous INTERPRETIVE READING – Advanced Low – Comparison
Next INTERPRETIVE READING – Advanced Low – Cultures
Table of Contents