INTERPRETIVE READING – Intermediate High – Communication


INTERPRETIVE READING – Intermediate High

  I can follow directions to do a science or other experiment.

அறிவியல்: தண்ணீரில் ஆரஞ்சு மிதக்குமா?

அறிவியல் மேஜிக்ஆரஞ்சு தண்ணீரில் மிதக்குமா, மூழ்குமா? இந்தக் கேள்வி உங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு சோதனையைச் செய்துபார்த்து விடலாமா?

அறிவியல் மேஜிக்ஆரஞ்சு தண்ணீரில் மிதக்குமா, மூழ்குமா? இந்தக் கேள்வி உங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒரு சோதனையைச் செய்துபார்த்து விடலாமா?

என்னென்ன தேவை?

  1. சிறிய வாளி
  2. தண்ணீர்
  3. ஆரஞ்சுப் பழம் ஒன்று

எப்படிச் செய்வது?

  1. வாளியில் முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.
  2. ஆரஞ்சுப் பழத்தைத் தண்ணீரில் போடுங்கள்.
  3. ஆரஞ்சு தண்ணீரில் மிதக்கிறதா?
  4. தண்ணீரில் மிதக்கும் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, அதன் தோலை உரியுங்கள்.
  5. தோல் உரித்த பழத்தை அப்படியே தண்ணீரில் போடுங்கள்.
  6. இப்போது என்ன ஆகிறது? அடடே, தண்ணீருக்குள் ஆரஞ்சு மூழ்கிவிட்டதே.
  7. தோலுடன் ஆரஞ்சைப் போட்டபோது மிதந்த பழம், தோலை நீக்கிய பிறகு மூழ்குவது எப்படி?

காரணம்:

திரவத்தில் ஒரு பொருள் மூழ்கவோ மிதக்கவோ அந்தத் திரவம் பொருள் மீது செலுத்தும் மேல் நோக்கிய விசையே காரணம். ஒரு பொருளின் அடர்த்தியானது திரவத்தின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பொருள் திரவத்தில் மூழ்கும். திரவத்தின் அடர்த்தியைவிடக் குறைவாக இருந்தால் மிதக்கும். இதைத்தான் ஆர்க்கிமிடிஸ் தத்துவம் என்கிறார்கள்.

ஆரஞ்சுப் பழத்தை அப்படியே தண்ணீரில் போட்டபோது, பழம் தன்ணீரில் மிதந்தது. ஆனால், தோலை நீக்கிவிட்டு போட்டபோது பழம் மூழ்கிவிட்டது. ஆரஞ்சுப் பழத்தின் தோலில் காற்றுப் பைகள் இருக்கின்றன. இவை பழத்தின் அடர்த்தியைக் குறைத்து, தண்ணீரில் மிதக்க வைக்கின்றன. ஆனால், தோலை நீக்கிய பிறகு காற்றுப் பைகள் இல்லாததால், பழம் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது.

லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு தண்ணீரில் குதித்தால், அதில் இருக்கும் காற்றின் காரணமாக நாம் மிதப்போம். அதேபோல்தான் ஆரஞ்சுப் பழமும் தோலுடன் இருந்தபோது மிதக்கிறது.